கேள்வி: டாக்டர் அவர்களுக்கு வணக்கம், எனக்கு வயது 32. சமீபத்தில் எனக்கு ஒரு வரன் அமைந்துள்ளது.
இரு வீட்டாருக்கும் மிகவும் திருப்தி. எதேச்சையாக பெண்ணின் தாயாரிடம் பேசும் போது அவர் ஒரு விசயத்தை சொன்னார்.
என்னுடைய பெண்ணின் இரண்டு கருமுட்டை பையில் ஒன்று DERMOID CYST (DERMOID OVARY CYST (HAIR)) ஆபரேசன் செய்து எடுத்து விட்டார்கள்.
ஒரு கருமுட்டை பை நன்றாக உள்ளது என்று கூறினார்.
வரும் கணவனிடம் இதை சொல்லி அவர் விருப்பப்பட்டால் மட்டுமே இந்த திருமணம் என பெண் மிக தெளிவாக நேர்மையுடன் சொல்லியுள்ளார்.
எனக்கு இப்போது என்ன செய்வதென்று தெரியவில்லை.
இனையதளத்தில் தேடிய போது ஒரு கருமுட்டை பையே போதும் என சொல்கிறது. +2 படிக்கும் போது ஆப்பரேசன் நடந்துள்ளது.
அதற்கு பிறகு மருத்துவ பரிசோதனை செய்து பார்த்ததில் எந்த கோளாறும் இல்லை என்று அவருடைய தாயார் கூறுகிறார்.
மாதவிடாயிலும் எந்த பிரச்சனையும் இல்லையாம்.
இந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டால்
எனது இல்லற வாழ்க்கை நன்றாய் இருக்குமா ?
இதனால் உடலுறவு கொள்ளும் போது பிரச்சனை ஏற்படுமா ?
குழந்தை பிறக்குமா ?
எனக்கு தக்க ஆலோசனை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மருத்துவரின் பதில்: வணக்கம். முதலில் அந்த பெண்ணை பாராட்டியே ஆக வேண்டும்.
வெகு சுலபமாக இந்த விஷயத்தை அந்த பெண் உங்களிடம் மறைத்திருக்கலாம்,
ஆனால் உங்களிடம் உண்மையை சொல்ல வேண்டும் என்று அந்த பெண் வெளிப்படையாக இருந்ததனால் அந்த பெண்
கண்டிப்பாக, நேர்மையானவராக இருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை.
பெண்ணின் கருமுட்டை பை ஒன்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினால்,
உடலுறவின் போது எந்த மாற்றத்தையும் உணர இயலாது.
கருமுட்டைப் பை (Ovary) என்பது பெண்ணுருப்பினை தாண்டி, இரு புறமும் அமைந்துள்ளது.
இதனால் உங்கள் உடலுறவு சுகத்தில் எந்த பிரச்னையும் வர வாய்ப்பு இல்லை.
மருத்துவ ஆலோசனைக்கு வருவோம்,
DERMOID OVARY CYST அல்லது MATURE TERATOMA என்று அழைக்கப்படும் “கருமுட்டைப் பை கட்டி” என்பது பரவாத,
புற்றுப் பிரச்னை அல்லாத (non cancerous) ஒரு வளர்ச்சி.
இதனால் அந்த பெண்ணின் இன்னொரு கருமுட்டைப் பை (Ovary) பாதிக்க வாய்ப்பு இல்லை.
அவரின் அந்த கருமுட்டைப் பை நன்றாக வேலை செய்கிறது என்பது அவருக்கு சரியான அளவில் மாத விடாய் வருகிறது
என்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
கரு முட்டை (Ovum/egg) என்பது பெண்களுக்கு பிறக்கும் போதே இத்தனை என்று வரையறுக்கப்படுகிறது.
அந்த முட்டைகள் அவர்களின் இரு கருமுட்டைப் பைகளிலுமே, கிட்டத்தட்ட சரி பாதியான எண்களில், தங்கி இருக்கும்.
பெண் வயதுக்கு வந்த பின், சராசரியாக இருபதெட்டு நாட்களுக்கு ஒரு முறை அந்த முட்டைகள் வளர்ச்சி பெற்று
பெல்லோபியன் குழாய் (Fallopian tube) வழியாய் கீழிறங்கும்.
விந்தனுக்கள் கருப்பைக்குள் வந்தால் கருத்தரிப்பார். இல்லையென்றால் மாதவிடாய் வெளிப்படும்
கருத்தரிக்க தேவையானது ஒரு கரு முட்டை மட்டுமே.
இதனால் தேவைக்கு அதிகமாகவே அந்தப் பெண்ணிடம் கருமுட்டைகள் உள்ளன.
இதனால் நடைமுறை வாழ்க்கையில் அந்தப் பெண்ணால்,
அதுவும் அந்த பெண் முப்பது வயதுக்கு கீழ் இருந்தால், கருவுற்று, பிள்ளைகள் பெற முடியும்.
இன்னொரு விஷயத்தை இங்கே குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.
ஒருவருக்கு இரண்டு சிறுநீரகத்தில் (Kidney) ஒன்று அகற்றப் பட்டது என்று உதாரணத்திற்காக வைத்துக் கொள்ளுங்கள்,
அவருக்கு ஒரு சிறுநீரகமே எல்லா வேலையையும் செய்து முடித்து விடும்.
அவரால் ஒரு சிறுநீரகம் அகற்றப்பட்டதை உணரக் கூட முடியாது,
அந்த அளவுக்கு ரத்த சுத்திகரிப்பை ஒரு சிறுநீரகமே சிறப்பாக செய்து முடித்து விடும்.
ஆனால், ஏதோ, ஒரு விபத்தினாலோ, அல்லது எதிர்பாராத நோய் தாக்கத்தலோ இருக்கும்
ஒரு சிறுநீரகதிற்கும் பாதிப்பு வந்து விட்டால் என்ன ஆகும்?
இதே போல, அந்த பெண்ணால் உங்களுக்கு பிள்ளைகளை பெற்றுத் தர முடியும் என்றாலும்,
எதிர்பாராத விதமாக, மீதம் இருக்கும் ஒரு கருப்பைக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால்,
அதற்கு அப்புறம், அந்தப் பெண்ணால் பிள்ளை பெற முடியாது என்பதே கசப்பான உண்மை.
இதற்கான வாய்ப்பு மிக அரிது என்றாலும்,
ஒரு மருத்துவர் என்ற முறையில் இதை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.
மருத்துவ ரீதியாக அனைத்தையும் கூறி விட்டேன், முடிவு உங்கள் கையில்.
என் தனிப்பட்ட கருத்து அந்த பெண்ணை தாரளமாக தயக்கமின்றி திருமணம் செய்துகொள்ளலாம்.
வாழ்த்துகள்
==–==
Feel Free to Contact us
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.